ஆட்சிக்கு வந்துவிட்ட மாய மோகம் தலைக்கேறி, அமைச்சரவை உறுப்பினர்கள் சிலர் அதிமுகவை சீண்டிப் பார்க்கும் வகையில் பேசி வருவது கண்டனத்துக்குரியது என அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. குறிப்பாக, நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் குறித்தான பதிலுரையில், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அதிமுகவை விமர்சித்ததற்கு அதிமுக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளது.
அமைச்சர் ஆனந்த் தனது கட்சி மற்றும் தலைவர் குறித்து பேசியது யாருக்கும் கவலையில்லை என்றும், பிளாக் டிக்கெட் விற்றது ஒரு வரலாறா என கேள்வி கேட்கப் போவதில்லை என்றும் அதிமுக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், தேவையே இல்லாமல் அதிமுகவை சீண்டும் வகையில் அமைச்சர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், அதற்கான எதிர்வினையை அவர் நிச்சயம் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அதிமுக வலியுறுத்தியுள்ளது.
'சர்கார்' திரைப்பட பேனர்களை கழகத் தொண்டர்கள் கிழித்ததால் தான் அதிமுக ஆட்சி 2021-ல் அமையவில்லை என்று அமைச்சர் கூறியதாக அதிமுக குறிப்பிட்டுள்ளது. அரசியல் புரிதலற்ற 107 அறிவிலிகள் சட்டமன்றத்தை ஆக்கிரமித்திருப்பதால் இந்த அலங்கோலம் ஏற்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளது.
உலகத் தமிழர்களின் இதயங்களில் வீற்றிருக்கும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் இயற்பெயரை தவறாக சித்தரித்து ஒரு படம் வந்தால், அம்மாவின் வழிவந்த தொண்டர்கள் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் என்றும் அதிமுக குறிப்பிட்டுள்ளது. எப்போதும், தங்கள் இதயதெய்வங்களைப் பழித்துப் பேசுவோர் யாராக இருந்தாலும், இயக்கத்தின் தொண்டன் வீறுகொண்டு எழுவான் என்றும், அவனது அரசியல் எதிர்வினை எதிரிகளின் அரசியல் வாழ்க்கையை முடித்துக் கட்டிவிடும் என்றும் அதிமுக எச்சரித்துள்ளது.
மேலும், 'சர்கார்' படத்தில் தூக்கி எறிவது போல காட்சி அமைத்த "அம்மா லேப்டாப்"களை இப்போது ஏன் வழங்குகிறீர்கள் என்றும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. அன்று பழித்துப் பேசிய அம்மா அவர்களின் பெயரை, அன்று படத்தில் தூக்கி எறிந்த அவரின் மக்கள் நலத் திட்டங்களை இன்று அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதற்கு கேவலமாக இல்லையா என்றும் அதிமுக கேட்டுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, 10 ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகு ஒரு மாற்றம் வேண்டும் என்ற தமிழக மக்களின் சாதாரண எண்ணப்படி தான் வெற்றி வாய்ப்பு நழுவியது என்றும் அதிமுக குறிப்பிட்டுள்ளது. அப்போதும் 33.3% வாக்குகளோடு, 75 தொகுதிகளில் வென்று, மக்களின் ஆதரவோடு ஐந்தாண்டுகள் பிரதான எதிர்க்கட்சியாக பணியாற்றினோம் என்றும் அதிமுக தெரிவித்துள்ளது.
எனவே, "பேனரைக் கிழித்ததால் ஆட்சி கவிழ்ந்தது, ஒரு நடிகனைக் கண்டு அரசாங்கமே" என்றெல்லாம் உருட்டும் உங்கள் பழைய போக்கை தியேட்டர் வாசலோடும், ட்விட்டர் அணில் குஞ்சுகளோடும் நிறுத்திக் கொள்ளுங்கள் அமைச்சரே என அதிமுக காட்டமாக கூறியுள்ளது.
(பி.கு. : 'சர்கார்' பட சர்ச்சையில் ஒரு விஷயத்திற்கு வேண்டுமானால் வருத்தப் படுகிறோம்- அந்த குப்பைப் படத்திற்கு எங்களால் ஒரு 2 நாட்கள் Free Promotion கிடைத்ததற்காக..!!)” என்றும் அதிமுக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.

