மலையாளத்தில் வெளியாகி 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்ற 'பிரேமலு' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை அள்ளிய இளம் நாயகி மமிதா பைஜு. இவர் 'டியூட்', 'ஜனநாயகன்', 'கர' போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடமும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
சூர்யாவுடன் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்திலும், 'இரண்டு வானம்' படத்திலும் மமிதா பைஜு நடித்து வருகிறார். 'இரண்டு வானம்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில், விஜய்யின் 'ஜன நாயகன்' இசை வெளியீட்டு விழாவில் மேடையில் உற்சாகமாக நடனமாடிய மமிதா, ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க 'அழகிய தமிழ் மகன்' படத்தில் இடம்பெற்ற 'எல்லா புகழும் ஒருவனுக்கே…' பாடலின் சில வரிகளைப் பாடினார். இந்த காணொளி இணையத்தில் வைரலாகி, பின்னர் ட்ரோல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் மமிதா பைஜு பேசிய கருத்துக்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன. தனது ரசிகர்களுக்கு என்றும் நினைவில் நிற்கும் படங்களை வழங்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு அன்பான குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்றும், தனது கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும்போது உண்மையான மகிழ்ச்சியும், மன அமைதியும், திருப்தியும் தனக்கு கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த லட்சியங்களை நோக்கியே தனது பயணம் இருப்பதாக மமிதா பைஜு கூறியுள்ளார். அவரது இந்த கருத்துக்கள் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்க அவர் தொடர்ந்து முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
