சென்னை: தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து, பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் நிர்வாக இயக்குநர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் உத்தரவால், 2 வாரங்களுக்குள் கடைகளை காலி செய்வது சாத்தியமில்லை என்றும், உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பார் உரிமையாளர்கள், கட்டிட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு திரண்டு, தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2,700 பார்களை மூடும் நடவடிக்கைக்கு தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், பார் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் என். அன்பரசன் கூறுகையில், 'பள்ளி, கோயில், பேருந்து நிலையம் அருகில் உள்ள 717 கடைகளை மூடும் தமிழக அரசின் உத்தரவை வரவேற்கிறோம். ஆனால், உச்ச நீதிமன்றம் 50 மீட்டர் என கூறியுள்ள நிலையில், 500 மீட்டர் என நிர்ணயிப்பதால் எந்த மதுபானக் கடையும் இயங்க முடியாத சூழல் உருவாகும். இதை அதிகாரிகள் முதல்வருக்கு எடுத்துரைக்க வேண்டும். தற்போது இயங்கும் 717 மதுபானக் கடைகளும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் செயல்படுகின்றன. புதிய அரசு ஊழியர்களின் வாழ்வாதாரம் குறித்து கவலைப்படாமல் இது போன்ற செயல்களை செய்வது ஏற்கத்தக்கதல்ல' என்றார்.
அவர் மேலும், 'புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு எங்கள் கோரிக்கையாக, மதுக் கடைகளை மூட கால அவகாசம் வழங்க வேண்டும். இல்லையெனில், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மதுபானக் கடைகளையும் மூட வேண்டும்' என்று கோரிக்கை மனு அளித்துள்ளதாகக் கூறினார். சங்கப் பிரதிநிதிகளை நிர்வாக இயக்குநர் மாலை அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, மாலை முதல் பார்கள் மீண்டும் திறக்கப்பட்டன.