அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது 3 நாள் சீன பயணத்தின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நடத்திய முக்கிய பேச்சுவார்த்தையில் தைவான் விவகாரம் சூடுபிடித்தது. இந்த சந்திப்பில், 'சீனா-அமெரிக்கா உறவில் தைவான் ஒரு மிக முக்கிய மற்றும் உணர்ச்சிகரமான விஷயம். இதை சரியாக கையாண்டால் மட்டுமே இரு நாட்டு உறவு நீடிக்கும். தவறும்பட்சத்தில், இரு நாடுகளும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சூழல் உருவாகிவிடும். இது ஒட்டுமொத்த உறவையும் பேராபத்தில் தள்ளும்' என சீன அதிபர் ஜி ஜின்பிங், டிரம்பிடம் நேரடியாக எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, தைவானுக்கு பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை செய்ய டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்திருந்தது. ஜி ஜின்பிங்கின் இந்த நேரடி எச்சரிக்கைக்குப் பிறகு, அமெரிக்கா தனது ஆயுத விற்பனை திட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமா என்ற கேள்வி எழுந்தது. இது இரு நாடுகளுக்கிடையேயான உறவில் ஒரு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தைவானுக்கு ஆயுத தொகுப்பு வழங்கும் முடிவை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா இல்லையா என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, ஏற்கனவே உச்சகட்டத்தில் இருந்த பதற்றத்தை சற்று தணிக்கும் விதமாக அமைந்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தைவான் தன்னை ஒரு தனி சுதந்திர நாடாக அறிவித்து செயல்பட்டு வந்தாலும், அது தங்களுடைய பிராந்தியம் என்றே சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த முரண்பட்ட நிலைப்பாடு, இரு நாடுகளுக்கிடையேயான உறவில் தொடர்ந்து ஒரு சிக்கலான கேள்வியாகவே நீடிக்கிறது.