டெல்லி: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் திடீரென ஏற்பட்ட லிட்டருக்கு ரூ.3 உயர்வு, மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். 'மோடி அரசின் தவறுகளுக்கு மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்?' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் பெட்ரோல் விலை ரூ.103.98 ஆகவும், டீசல் விலை ரூ.95.50 ஆகவும் உயர்ந்துள்ளது. இது லிட்டருக்கு முறையே ரூ.3.14 மற்றும் ரூ.3.11 அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் 100.77 ரூபாயாகவும், டீசல் 93.67 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது. மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களிலும் இதேபோல் விலை உயர்வு பதிவாகியுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பதிவில், "மோடி அரசின் தவறான கொள்கைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ரூ.3 விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீதமுள்ள தொகையை தவணைகளில் வசூலிப்பார்கள்" என காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்திய அரசின் தலைமைத்துவ நெருக்கடி, தொலைநோக்குச் சிந்தனையின்மை மற்றும் திறமையின்மையே காரணம் என சாடியுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதும், மத்திய அரசு மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை என்றும், கடந்த 10 ஆண்டுகளில் ரூ.43 லட்சம் கோடி வருவாய் ஈட்டியும், தற்போது பணவீக்கத்தின் சுமையை மக்கள் மீது திணிப்பது ஏன் என்றும் ராகுல் காந்தி கேள்விகளை எழுப்பியுள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க 30 நாட்கள் விலக்கு அளிக்கப்பட்டபோது, அமெரிக்காவிடம் அனுமதி கேட்டு யாசிக்க வேண்டிய நிலைக்கு நாட்டை மோடி அரசு கொண்டு வந்தது ஏன் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.