நடிகை சாய் பல்லவியின் பாலிவுட் அறிமுகம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், அவருக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த சாய் பல்லவி, இந்தி சினிமாவில் முதல் படத்திலேயே தோல்வியைச் சந்தித்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூனைத் உடன் இணைந்து நடித்த 'ஏக் தின்' திரைப்படம் கடந்த மே 1ஆம் தேதி வெளியானது. சுமார் 15 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், வெளியான இரண்டு வாரங்களில் வெறும் 5 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்து படுதோல்வி அடைந்ததாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சாய் பல்லவிக்கு மேலும் ஒரு பெரும் அதிர்ச்சியாக, 'ராமாயணா' படத்தில் அவருக்கான டப்பிங் குரலை மாற்றியமைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக பாலிவுட்டில் செய்திகள் பரவி வருகின்றன. சமூக வலைத்தளங்களில் சாய் பல்லவியின் இந்தி உச்சரிப்பு விமர்சனத்துக்குள்ளான நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
'ராமாயணா' படத்தில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்து வருகிறார். இந்திய சினிமா வரலாற்றிலேயே மிக அதிக பட்ஜெட்டில், அதாவது சுமார் 4000 கோடி ரூபாய் செலவில் இரண்டு பாகங்களாக இந்தப் படம் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது.