தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்துள்ளது. இந்த வானிலை மாற்றத்தின் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், காரைக்கால் பகுதிகளிலும் இதேபோன்ற மழை எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை, இன்று லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும் பரவலாக லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (15-ம் தேதி) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், நாளை மறுநாள் (16-ம் தேதி) தேனி மாவட்டத்திலும் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகள், மற்றும் அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் நாளை மறுநாள் (16-ம் தேதி) வாக்கில் தொடங்க சாதகமான சூழல் நிலவி வருவதாகவும், இதனால் பருவமழை விரைவில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.