விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ அர்ஜூனன் உள்ளிட்ட சி.வி.சண்முகத்தின் தீவிர ஆதரவாளர்களான 1,150 அதிமுக நிர்வாகிகள், தங்களது அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளனர். இந்த ராஜினாமா கடிதங்கள் அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தலைமை சரியில்லாத காரணத்தினாலேயே இந்த ராஜினாமா முடிவை எடுத்ததாக அவர்கள் விளக்கமளித்துள்ளனர். குறிப்பாக, சி.வி.சண்முகத்திற்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படாததால், விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த அதிருப்தியின் வெளிப்பாடாகவே இந்த பாரிய ராஜினாமா நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தகுதி இல்லாத ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிர்வாகியுடன் எங்களால் பயணிக்க முடியாது. கட்சியில் இருந்து சி.வி.சண்முகத்தை நீக்கியதற்கான காரணத்தையும் நாங்கள் கேட்கிறோம். நாங்கள் அனைவரும் ராஜினாமா செய்யப் போகிறோம். அதிமுக தலைமை சரியாக செயல்படவில்லை' எனத் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள், 'நாங்கள் கட்சியிலிருந்து விலகிச் செல்லவில்லை. அம்மாவின் ஆன்மா என்றும் எங்களுடன்தான் இருக்கும். கட்சிக்காக உழைத்த ஒருவரை, அவன் இவன் என்று சொல்வதுதான் அரசியல் நாகரிகமா? இது நியாயமில்லை' என்று தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்தினர். இந்த திடீர் ராஜினாமா அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
