திருநெல்வேலி டவுன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவத்தில், மூன்று நாட்களாக பூட்டிக் கிடந்த வீட்டில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லணை அரசு பள்ளிக்கு எதிரே உள்ள ஒரு வீட்டில் மரிய ஜெயா என்பவர் சமீபத்தில் வாடகைக்குக் குடி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக அவரது வீடு பூட்டிக் கிடந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர், இது குறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பெண் ஒருவர் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, காவல் துறையினர் அந்தப் பெண்ணின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் முக்கூடல், சிங்கம்பாறை கிராமத்தைச் சேர்ந்த ஆபேல் ராஜா என்பவரின் மனைவி மரிய ஜெயா என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், தனது மனைவியைக் காணவில்லை என்று ஆபேல் ராஜா கடந்த 10-ஆம் தேதி முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனது மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்திருந்த நிலையில், அவர் வேறொரு இடத்தில் சடலமாக மீட்கப்பட்டது காவல் துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, முக்கூடல் பகுதியைச் சேர்ந்த மரிய ஜெயா, திருநெல்வேலி மாநகரப் பகுதியில் ஏன் வீடு எடுத்து தங்கினார்? அங்கு அவர் உயிரிழக்கக் காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்குப் பதிலைத் தேடி வருகின்றனர்.
முக்கூடல் போலீசார் ஈடிவி பாரத் செய்தியாளருக்கு அளித்த தகவலின்படி, உயிரிழந்த மரிய ஜெயாவின் கணவர் ஆபேல் ராஜா தனியார் பேப்பர் மில் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். மரிய ஜெயா தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்ததால், வேலை நிமித்தமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய சூழல் இருந்துள்ளது.
இந்நிலையில், மரிய ஜெயா வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பாததால் அவரது கணவர் ஆபேல் ராஜா கடந்த 10-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் அவரைப் பல இடங்களில் தேடியபோது, அவர் திருநெல்வேலியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, மரிய ஜெயாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏதேனும் பிரச்சனைகள் இருந்தனவா என்பது குறித்தும், ஒருவேளை குடும்பப் பிரச்சனை காரணமாக அவர் விபரீத முடிவை எடுத்திருக்கலாமா என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
