முதல்வர் மு.க. ஸ்டாலின், கரூர் சென்றபோது காவல்துறை மீது பழிபோடுவதாகவும், 'தில் இருக்கா, திராணி இருக்கா, ஒரு ****** உம் கிடையாது' போன்ற நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயக்குமார் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கரூர் சென்றுள்ள முதல்வர், வழக்கம் போல தன் வசனகர்த்தா கொடுத்த ஸ்கிரிப்டை முழங்கித் தள்ளியுள்ளார். என் நெஞ்சில் நீங்காமல் இருக்கும் கரூர் மக்களை சந்திக்கப் போகிறேன் என்று சொன்ன முதல்வர், உண்மையில் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காகவே கரூர் சென்றிருக்கிறார். மேலும், ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்று அள்ளித் தந்த கவர்ச்சி வாக்குறுதிகளை மீண்டும் ஒருமுறை வாக்குறுதியாகக் கொடுத்துள்ளார்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், 'மீண்டும் மீண்டும் தனது தவறை உணராமல் காவல்துறை மீது பழி போடுவது, பஞ்ச் டயலாக் அடிப்பது, 'தில் இருக்கா, திராணி இருக்கா, ஒரு ****** உம் கிடையாது' என்று அநாகரீகமாகப் பேசுவது போன்ற தனது வழக்கமான பேச்சுக்களையும் முதல்வர் வெளிப்படுத்தியுள்ளார்' என்றும் தெரிவித்துள்ளார்.
'நான் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் என்று சொல்லும் முதல்வருக்கு, தன்னை பார்க்க வந்து இறந்தவர்களுக்கோ அல்லது அவர்களது குடும்பத்தாருக்கோ பொதுவெளியில் ஒரு மன்னிப்பு கேட்கக் கூட மனம் வருவதில்லை. மாறாக, தன்னை நம்பி மாற்றத்திற்கான அரசியலை நோக்கி வரும் மக்களை உசுப்பேத்தி, ரசிக மனநிலையிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்' என ஜெயக்குமார் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'தீர்ந்துபோன சக்தியிலிருந்து குதிரை பேரத்தில் ஆள் பிடிக்கும் முதல்வர் அவர்களே, கட்சி நிதி (Party Fund) பற்றி பேசினால் திமுக ஓடுவது உண்மைதான். ஆனால், உங்கள் கட்சியினர் செய்யும் முறைகேடுகள் நாள்தோறும் செய்திகளில் வருவதை நீங்கள் பார்ப்பதில்லையோ? முடிந்தால் பாருங்கள்' என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
'நடிகரை பார்க்க வந்து இறந்தவர்களுக்கு நினைவு மண்டபம், உறவினர்களுக்கு அரசு வேலை. What bro, it's very wrong bro!! #(ஏ)மாற்றம்' என்றும் ஜெயக்குமார் தனது பதிவை முடித்துள்ளார்.
முதல்வரின் பேச்சுக்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ஜெயக்குமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக, மக்களின் உயிரிழப்பு மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நிலை குறித்து முதல்வர் அனுதாபம் காட்டத் தவறியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், திமுகவின் செயல்பாடுகள் மற்றும் கட்சி நிதி குறித்த முறைகேடுகளையும் அவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.
