தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்றிதழ்கள் வழங்க, திமுக ஆட்சியில் சுமார் 100 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாரில், பெரும் மோசடி அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை 47 தனியார் பள்ளிகளிடம் இருந்து 7 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பணம் வசூலித்து ஏமாற்றியதாகக் கூறப்படும் திமுக செய்தித் தொடர்பு அணி மாநில நிர்வாகி பிடி அரசகுமார் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில், புகாரில் முகாந்திரம் இருப்பது தெரியவந்ததையடுத்து, பிடி அரசகுமார் கைது செய்யப்பட்டார். இந்த முறைகேட்டில் மேலும் பல திமுக பிரமுகர்களின் பெயர்களும் அடிபடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், புகார் அளிக்க முன்வரும் தனியார் பள்ளி நிர்வாகிகளை, இந்த முறைகேட்டில் தொடர்புடைய திமுக பிரமுகர்கள் மிரட்டுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகிகளுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுவரை சுமார் 47 தனியார் பள்ளிகளிடம் இருந்து 7 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருப்பதாக காவல்துறை அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த மோசடி, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமாக பல கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்திருப்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
கைது செய்யப்பட்ட பிடி அரசகுமார் மற்றும் இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற திமுக பிரமுகர்கள், மோசடி செய்த பணத்தில் எங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கியுள்ளனர் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏமாந்த தனியார் பள்ளி நிர்வாகிகளின் முழுப் பட்டியலைத் திரட்டும் பணியிலும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
