முதலமைச்சர் விஜய் மீது ஊழல் தடுப்புப் பிரிவில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி.அர்லேகருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஜோசப் விஜய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், வேறு சின்னங்களில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இணைந்துள்ளனர்.
கடந்த ஜூன் 27 அன்று நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில், மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யுமாறு விஜய் கூறியதாகவும், அவர்களை மீண்டும் வெற்றி பெற வைப்பதாக உறுதி அளித்ததாகவும் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருந்தார். ஆனால், இதனை மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில் செல்வன் மற்றும் ராஜேந்திரன் நிராகரித்துவிட்டதாக வைகோ கூறினார். கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ டி.எம்.ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி எம்எல்ஏ எஸ்.செந்தில் செல்வன் ஆகியோர் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்களாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்.
ஆளும் தவெக அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், இந்த இருவரையும் பதவி விலகச் செய்ய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் இணைந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக வைகோ வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த குதிரை பேரத்தில் முதலமைச்சர் நேரடியாக ஈடுபட்டுள்ளதால், அவர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.
மாற்றுக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி தனது கட்சியில் இணைத்துக் கொள்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், எஸ்.ஜெயக்குமார், பி.சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில், இந்த காலியிடங்களில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டுள்ளனர் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின்படி குதிரை பேரம் நடத்தக்கூடாது என்பதால், முதலமைச்சர் மீது ஊழல் கண்காணிப்பு துறையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குதிரை பேரத்தை ஊக்குவிக்கக் கூடாது என்றும் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார்.