கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தவெக ஆட்சி அமைய ஆதரவு கொடுக்கும் நிலை, தோழமைக் கட்சிகள் என்ற நிலை, கூட்டணி அமைக்கும் நிலை என்பதே அந்த 3 முடிவுகள்" என்று குறிப்பிட்டார்.
ஜனநாயகத்தில் கலந்து ஆலோசிப்பது அவசியம் என்றும், ஆலோசனை கூட்டம் நேர்மறையாக நடந்ததாகவும் மாணிக்கம் தாகூர் கூறினார். அனைவரின் கருத்துக்களும் பரிமாறப்பட்டதாகவும், விரைவில் அடுத்த கூட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். தவெகவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்த பிறகு, இந்தியா கூட்டணி குறித்து பேசலாம் என்றும், மதசார்பற்ற ஆட்சி அமையும் என முதல்வர் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
யார் யாரெல்லாம் எம்.பிக்களை வைத்தார்களோ அவர்கள்தான் INDIA கூட்டணியில் இருக்கிறார்கள் என்றும், எப்போது தவெகவிற்கு எம்பிக்கள் வருகிறார்களோ அப்போது உடனடியாக INDIA கூட்டணி பற்றி பேசுவோம் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
மேலும், இந்தக் கூட்டணிக்கு ஒரு ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும், பொதுவான குறிக்கோள் ஒன்றை அமைக்க வேண்டும், இதற்கு ஒரு பெயர் வைக்க வேண்டும் ஆகிய மூன்று விஷயங்களையும் அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யவுள்ளோம் என்றும் அவர் கூறினார்.