இரக்கம், சேவை மற்றும் சமூக தாக்கத்தை கொண்டாடும் மூன்று தசாப்தங்களை நினைவுகூரும் வகையில், புகழ்பெற்ற 30ஆவது தேசிய மஹாவீர் விருதுகளுக்கான விண்ணப்பங்களை பகவான் மஹாவீர் ஃபவுண்டேஷன் வரவேற்கிறது. அஹிம்சை மற்றும் சைவம், கல்வி, மருத்துவம், சமூக நலன் மற்றும் பொதுச் சேவை ஆகிய துறைகளில் தனிநபர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஆற்றிய தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்கும் இந்தியாவின் மிக மதிப்புமிக்க விருதுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31, 2026 வரை அவகாசம் உள்ளது.
ஒவ்வொரு விருதுக்கும் ₹10 லட்சம் ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படும். மனித நேயத்தைப் பெருமைப்படுத்தும் சேவையைக் கொண்டாடும் வகையில், பகவான் மஹாவீர் ஃபவுண்டேஷன், கடந்த 29 ஆண்டுகளில் 26 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 101 சிறப்புமிக்க தனிநபர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளைக் கவுரவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 17 விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நீதியரசர் எம். என். வெங்கடாசலையா தலைமையிலான புகழ்பெற்ற நடுவர் குழுவினரால் விருதாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இது விருதுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. அஹிம்சை மற்றும் சைவம், கல்வி, மருத்துவம், சமூக நலன் மற்றும் பொதுச் சேவை ஆகிய துறைகளில் சிறந்த சேவை புரிவோர் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
1995 முதல், பகவான் மகாவீர் ஃபவுண்டேஷன், அஹிம்சை மற்றும் சைவத்தைப் பரப்புதல், கல்வி, மருத்துவம், சமூக நலன் மற்றும் பொதுச் சேவை ஆகிய துறைகளில் இந்தியா முழுவதும் சிறப்புப் பெற்ற தனிநபர்களுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும் அங்கீகாரமாக மகாவீர் விருதுகளை வழங்கி வருகிறது. பரிந்துரை படிவங்களை www.bmfawards.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.