சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் தலைமைச் செயலாளர் சாய்குமார், அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் 28 துறைகளின் செயல் திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய், "அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சிறப்பு கவனம் தேவை. கட்சிக்காரர்கள் என முக்கியத்துவம் கொடுக்காமல், பொதுமக்களுக்கான அரசாக நாம் செயல்பட வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் போன்ற துயர சம்பவங்கள் இனி ஒருபோதும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.
மேலும், "தவெகவினர் உட்பட யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று காவல்துறைக்கு முதலமைச்சர் விஜய் அதிரடியாக உத்தரவிட்டார். அரசியல் தலையீடின்றி காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதாகவும், அரசுத் திட்டங்களை முழுமையாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு பணிகளைச் செய்ய முழு சுதந்திரம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உடனான இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவது குறித்தும், பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவது குறித்தும் முதலமைச்சர் விரிவாக அறிவுரைகளை வழங்கினார். நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.