தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் தனியார் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், இன்று மதியம் 12 மணி முதல் www.tnmedicalselection.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களைப் பதிவேற்றம் செய்ய, ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் ஒரு வாரத்திற்கும் மேலாக நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் பதற்றமின்றி விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் விண்ணப்பிக்கும் முன், நீட் ஹால் டிக்கெட், 10, 11, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC), இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் ஸ்கேன் பிரதிகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்ததற்கான EMIS எண் விவரங்கள் சரிபார்க்கப்படும்.
மூன்று வருடங்களுக்கு முன் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது EMIS எண் இல்லாதவர்கள், முதன்மைக் கல்வி அலுவலரின் சான்றொப்பம் பெற்ற சான்றிதழைப் பதிவேற்ற வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க, இணையதளத்தில் புதிய கணக்கை உருவாக்கி, தனிப்பட்ட விவரங்கள், கல்வி, நீட் தேர்வு ஹால் டிக்கெட் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதிச் சமர்ப்பிப்புக்கு முன், அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து நகல் எடுத்துக்கொள்ள வேண்டும்.