இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களின் மறைவுக்கு தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிரஞ்சீவி, தனது அதிர்ச்சியையும் மனவேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
சிரஞ்சீவி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், 'வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு ஆழ்ந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்துள்ளேன். நேற்று முன்தினம், கோவாவில் குஷ்பு மகள் திருமணத்தில் நாங்கள் சந்தித்தோம். அப்போது ஒன்றாகச் சிரித்து, நகைச்சுவைகளைப் பகிர்ந்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். பாக்யராஜ் வாழ்வும் மகிழ்ச்சியும் நிறைந்தவராக இருந்தார். இன்று காலை அவரது மறைவுச் செய்தியைக் கேட்டது நம்ப முடியாததாக இருக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், 'ஒரு சிறந்த திரைப்பட இயக்குநர், மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர் மற்றும் அருமையான நடிகர், இந்தியத் திரையுலகிற்கு அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். பூர்ணிமா, சாந்தனு மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த ஈடு செய்ய முடியாத இழப்பைத் தாங்கி கொள்ள இறைவன் அவர்களுக்கு வலிமையைத் தரட்டும். என் அன்பு நண்பனே, அமைதியாக இளைப்பாறு' என்றும் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு, தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகிற்கு ஒரு பெரும் இழப்பாகும். அவரது இழப்புக்கு திரையுலகினர் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.