டெல்லி: ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் ஒவ்வொரு சீசனிலும் கடுமையாக போராடி வரும் நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் மட்டும் யாருமே விரும்பாத ஒரு மோசமான சாதனையை படைத்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. பல ஆண்டுகளாக விளையாடி வந்தாலும், இந்த அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை என்பது ஒருபுறம் இருக்க, தற்போது 150 தோல்விகளை சந்தித்த முதல் அணி என்ற மோசமான பெயரையும் பெற்றுள்ளது.
புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, வெறும் 14.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது. 2026 சீசனில் டெல்லி அணி சந்திக்கும் 7வது தோல்வி இதுவாகும்.
இந்த படுதோல்வியின் மூலம் டெல்லி அணி ஐபிஎல் வரலாற்றில் 150 தோல்விகளை சந்தித்த முதல் அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. இதுவரை 277 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி, 147 போட்டிகளில் நேரடியாகவும், 3 போட்டிகளில் சூப்பர் ஓவரிலும் தோல்வியடைந்துள்ளது. இந்த பட்டியலில் டெல்லி அணிக்கு அடுத்தபடியாக பஞ்சாப் கிங்ஸ் அணி 144 தோல்விகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 137 தோல்விகளுடன் 3வது இடத்திலும், கொல்கத்தா 133 தோல்விகளுடன் 4வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் 130 தோல்விகளுடன் 5வது இடத்திலும் உள்ளன.
ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றிலும் அதிக தோல்விகளை சந்தித்த அணிகளின் உலகளாவிய பட்டியலில் டெல்லி அணி தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து உள்ளூர் தொடரில் விளையாடும் மிடில்செக்ஸ் அணி 171 தோல்விகளுடன் முதலிடத்திலும், டெர்பிஷயர் அணி 152 தோல்விகளுடன் 2வது இடத்திலும் உள்ளன.
இந்த ஆட்டத்தில் 47 பந்துகளில் சதம் விளாசிய கொல்கத்தா அணியின் பின் ஆலன், அந்த அணிக்காக அதிவேக சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்தார். 27 வயதான இவர் 5 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்களை பறக்கவிட்டார். முன்னதாக 2023ல் மும்பை அணிக்கு எதிராக வெங்கடேஷ் ஐயர் 49 பந்துகளில் சதம் அடித்ததே கொல்கத்தா அணியின் அதிவேக சதமாக இருந்தது. அந்த சாதனையை தற்போது பின் ஆலன் முறியடித்துள்ளார். சொந்த மண்ணிலேயே டெல்லி அணி தொடர் தோல்விகளை சந்தித்து மோசமான சாதனையை படைத்திருப்பது அந்த அணி ரசிகர்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.