சட்டப்பேரவையில் இல்லாத ஒருவரைப் பற்றி, 'அப்பாவைக் காணோம்' என்று முதலமைச்சர் கேலி செய்யும் வகையில் பேசியது மிகவும் தவறு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) பதிவில், 'தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. அதிலும் குறிப்பாகச் சட்டப்பேரவையில் இல்லாத ஒருவரைப் பற்றி, 'அப்பாவைக் காணோம்' என்று கேலி செய்யும் வகையில் முதல்வர் பேசியது மிகவும் தவறானது. இதற்கு எதிர்வினையாக, எதிர்க்கட்சித் தலைவர் 'கணவனைத் தேடும் மனைவி' என்று பேசியதும் தவறுதான்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்' என்பதை உணர்ந்து இருதரப்பினரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாகரிகமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய இருவரின் கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.