2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும் என்றும், 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை மாநில அரசுகளே நிரப்பிக்கொள்ள அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
நீட் தேர்வில் உள்ள அமைப்புரீதியான குறைபாடுகள் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளன. வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மிகுந்த கவலையோடு இந்தக் கடிதத்தை எழுதுவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்த முறைகேடுகளில் ஈடுபட்டதாக, பல மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் இதுவரை பிடிபட்டுள்ளனர். சிபிஐ விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. 22.8 லட்சம் மாணவர்கள் அடுத்து என்ன நடக்கும் என்ற தவிப்பில் உள்ளனர்.
இதுபோன்ற முறைகேடுகள் நடப்பது இது முதல்முறையல்ல. 2015-ஆம் ஆண்டு AIPMT தேர்வில் புளுடூத் மூலம் வினாத்தாள் கசிவு நடந்தது. உச்சநீதிமன்றம் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தியது. 2016-ஆம் ஆண்டு நீட் இரண்டாம் கட்டத்திலும் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்தன. 2017-ஆம் ஆண்டில் ஆள்மாறாட்டப் புகார்கள், மொழிபெயர்ப்புப் பிழைகள் எனப் பல பிரச்சனைகள் எழுந்தன. 2020, 2021-ஆம் ஆண்டுகளில் போலித் தேர்வர்கள் தேர்வெழுதியது, 2022-ஆம் ஆண்டிலும் ஆள்மாறாட்ட முறைகேடு, 2024-ஆம் ஆண்டு நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள், கருணை மதிப்பெண்கள், ஒரே மையத்தில் பல டாப் மாணவர்கள், 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை பணம் பெற்று வினாத்தாள் கசிவு எனப் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறைந்தது 155 மாணவர்கள் இந்த மோசடியால் பயனடைந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக மோசடி நடந்துள்ளது.
நீட் தேர்வு, தொடக்கம் முதலே ஏழை, கிராமப்புற, அரசுப் பள்ளி, தமிழ்வழி மாணவர்களுக்கு எதிராகவே இருந்து வருவதாக ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். தகுதி என்ற பெயரில், பணம் கொழிக்கும் வணிகமாகவும், பயிற்சி மையங்களால் உந்தப்பட்ட பணக்காரர்களுக்கான தேர்வாகவும் நீட் மாறிவிட்டது. பயிற்சி மையத் தொழிலில் 70 ஆயிரம் கோடி ரூபாய் புரள்கிறது. பல லட்சம் செலவழித்துப் பெறும் சிறப்புப் பயிற்சி இன்றி நீட் தேர்வில் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இது கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பெரும் தடைக்கல்லாக இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை முறை சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வாய்ப்புகளை உறுதி செய்தது. நீட் இந்த முறையைச் சீர்குலைக்கிறது. நீட் தேர்வு முறை உருவாக்கும் மன அழுத்தத்தால் மாணவர்களின் உயிரும் பறிபோகிறது. முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வை எதிர்த்ததாகவும், மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் மாநில உரிமைகளை மீட்க வலியுறுத்தியதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நீட் விலக்குக்காக இருமுறை சட்டம் இயற்றினோம், ஆனால் அவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன.
இந்த ஆண்டு நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டுள்ளதால், 2026-27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வை இரத்து செய்து, பள்ளிப் பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அரசுகளே மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரியுள்ளார். இதற்காக, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019-இன் 14-ஆம் பிரிவினைத் திருத்தி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 123-இன்படி, ஓர் அவசரச் சட்டத்தை இயற்றிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இலட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிசெய்ய இந்த கோரிக்கையை ஏற்க வேண்டும் எனப் பிரதமர் மோடியிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.