கிரிக்கெட் வீராங்கனைகள் பிரசவத்திற்குப் பிறகு மீண்டும் விளையாட்டிற்குத் திரும்ப உதவும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதற்கு பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது உலக அளவில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய படியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் குழந்தை பிறப்பிற்குப் பிறகு தங்கள் உடல் தகுதியை மீட்டெடுக்கவும், பயிற்சி பெறவும் உதவும் வகையில் 'Return to Play Post-Pregnancy Guidelines' என்ற வழிகாட்டுதல்களை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த வழிமுறைகள், வீராங்கனைகள் பாதுகாப்பாகவும், நிலையான முறையிலும் போட்டி கிரிக்கெட்டுக்குத் திரும்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதில் 16 வார கால கட்டமைப்பு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்கள், தயார்நிலை, மதிப்பாய்வு, மீட்டெடுத்தல், உடற்தகுதி மேம்பாடு, திரும்புதல் மற்றும் செம்மைப்படுத்துதல் என ஆறு நிலைகளைக் கொண்ட கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஐசிசியின் இந்த அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் (X) பக்கத்தில், 'விளையாட்டில் ஒரு வீராங்கனையின் பயணத்தின் அனைத்து கட்டங்களிலும், அவர்களுக்கு சரியான கட்டமைப்புடன் கூடிய ஆதரவு வழங்கப்படுவதை உறுதி செய்வதே உண்மையான அதிகாரமளித்தல் ஆகும். நாம் விளையாட்டை சரியான பாதையில் கொண்டு செல்கிறோம் என்பதற்கான சான்றாகும் இது. உலகெங்கிலும் உள்ள பெண் கிரிக்கெட் வீராங்கனைகளின் எதிர்காலத்திற்கு இது ஒரு மிகப்பெரிய உந்துசக்தியாக அமையும்' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், பிரசவத்திற்குப் பிறகு வீராங்கனைகள் சர்வதேச தரத்திலான கிரிக்கெட்டுக்குத் திரும்புவதைக் கண்காணிக்க ஒரு பிரத்யேக கேஸ் மேனேஜரை நியமிக்கவும் இந்த வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன. ஒரு தகுதிவாய்ந்த மருத்துவர் அல்லது உடற்பயிற்சி நிபுணர் இந்தப் பொறுப்பிற்கு நியமிக்கப்பட வேண்டும். தொடக்ககட்ட ஆய்வு நிலையில், தாய்மைக்கு ஏற்ப வீராங்கனைகள் தங்களை மாற்றிக்கொள்ள உதவுவதற்காக உளவியல் ரீதியான ஆதரவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, உடல்திறனை மேம்படுத்தும் பயிற்சிகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். எட்டு வார கால மதிப்பீடுகள் மற்றும் தீவிர கண்காணிப்புக்குப் பிறகு, உடற்பயிற்சி நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களின் மேற்பார்வையில் வீராங்கனைகள் மீண்டும் ஓட்டப் பயிற்சியைத் தொடங்கலாம். போட்டி கிரிக்கெட்டுக்குத் திரும்புவதற்கான அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பு, தசைக்கூட்டு சார்ந்த பிரச்சனைகள் மற்றும் இடுப்புத் தள தசை தொடர்பான பிரச்சனைகள் போன்ற அனைத்து விதமான அறிகுறிகளையும் விரிவாகக் கண்காணிப்பது அவசியமாகும்.
உள்ளூர் சட்டத் தேவைகளுக்கு ஏற்ப, நடைமுறை, உடல் மற்றும் உளவியல் ரீதியான ஆதரவு நடவடிக்கைகளின் மூலம் வீராங்கனைகளின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.