கோவையில் இன்ஸ்டாகிராம் நண்பர்களால் ஒரு மாணவி கொடூரமாக பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினீயரிங் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இவர், மேச்சேரி பகுதியைச் சேர்ந்த அருண் என்ற அருணாச்சலம் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு பாராட்டியுள்ளார்.
மாணவியின் நம்பிக்கையைப் பயன்படுத்தி, அருண் மாணவியின் நகையை வாங்கி ரூ.60 ஆயிரத்திற்கு அடகு வைத்ததாகவும், அதில் ரூ.30 ஆயிரத்தை மட்டுமே மாணவியிடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மீதித் தொகை குறித்து கேட்டபோது, தனது பைக் தவணைக்காக நிதி நிறுவனம் எடுத்துக்கொண்டதாக அருண் கூறியுள்ளார். மேலும் சந்தேகம் இருந்தால் நிதி நிறுவன மேலாளரிடம் கேட்டுக்கொள்ளுமாறு கூறி, தனது நண்பர் சந்தோஷ் என்பவரின் தொலைபேசி எண்ணையும் மாணவியிடம் கொடுத்துள்ளார்.
அதன்பிறகு, அருணும் சந்தோஷும் மாணவியுடன் நெருக்கமாகப் பழகி, வாட்ஸ்அப் வீடியோ காலில் நிர்வாணமாகப் பேசும்படி கூறியுள்ளனர். மாணவி அவ்வாறு பேசியபோது, அவர்களின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இருவரும் ரகசியமாகப் பதிவு செய்துள்ளனர். பின்னர், அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, மாணவியிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவரது தோழி விசாரித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மாணவியை நிர்வாண வீடியோ மூலம் மிரட்டி பணம் பறிக்க முயன்றது உறுதியானது. இதையடுத்து அருணாச்சலம் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.