புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட மக்கள் இயக்கத்தில், 'அம்மா' என்ற வார்த்தையால் ஈர்க்கப்பட்டு, 35 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டாவது தலைமுறையாக தன்னை அர்ப்பணித்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தற்போது தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் இயக்கம் வேதனைகளையும் சோதனைகளையும் எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டு, கனத்த இதயத்துடன் இயக்கத்திலிருந்து விலகுவதாக உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தனக்கு இந்த இயக்கம் வெறும் அரசியல் அமைப்பு மட்டுமல்ல, தன் உணர்வும், அடையாளமும், வாழ்க்கையின் ஒரு பகுதியும் என்று கூறியுள்ள விஜயபாஸ்கர், மாணவர் அணியில் தொடங்கிய தனது அரசியல் பயணம், எழுச்சி மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் களங்கள் என இந்த இயக்கம் தன்னை ஒரு அர்ப்பணிப்புமிக்க தொண்டனாக வழிநடத்தியதாகத் தெரிவித்துள்ளார். தனது இளமை, உழைப்பு, கனவுகள் அனைத்தும் இந்த இயக்கத்தோடு பின்னிப்பிணைந்தவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'அம்மா' வாழ்ந்த பொற்காலத்தில் இந்த இயக்கத்தில் பணியாற்றியதை ஒரு பொறுப்பாக மட்டுமல்லாமல், பெரும் பெருமையாகவும், பாக்கியமாகவும் கருதியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இன்றோ தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் தான் உயிராய் நேசித்த இயக்கம் வேதனைகளையும் சோதனைகளையும் எதிர்கொள்ளும் நிலை உருவாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில், மனமெல்லாம் தீராத வேதனையைச் சுமந்தபடி தனது பயணத்தைத் தொடர்வது சரியானதாக இருக்காது என்ற உணர்வோடு இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
எனவே, கனத்த இதயத்துடனும் கலங்கிய மனதுடனும், இதுவரை தன்னுடன் பயணித்த ரத்தத்தின் ரத்தங்களான கழகத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு, இந்த மகத்தான இயக்கத்திலிருந்து மனவலியோடு விலகுவதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தான் விலகுவது ஒரு கட்சியிலிருந்து அல்ல, தன் வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்திலிருந்து என்றும், கனத்த இதயத்துடன் இயக்கத்திலிருந்து விடைபெற்றாலும், தன் மண்ணுக்கான மக்களுக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பு வழக்கம்போல் தொடரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.