தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து மேடைக்கு மேடை பேசி வந்தார். ஆனால், தவெக ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கடந்த நிலையில், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்ற விமர்சனத்தையும் தவெக எதிர்கொண்டுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி சீமான், 'கும்மிடிப்பூண்டியில் வடமாநில தொழிலாளியால் மூன்று வயதான பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை. தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை என்ன செய்து கொண்டிருக்கிறது? தமிழ்நாடு காவலதுறை இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்து கொண்டிருக்கிறதா?' என தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், 'தமிழ்நாடு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக உருவெடுத்து இருப்பது வேதனையின் உச்சம். தவெக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று உள்ளதா? ஆட்சி என ஒன்று நடக்கிறதா?' என அடுக்கடுக்கான கேள்விகளை சீமான் முன்வைத்துள்ளார். முதல்வர் வாகனம் ஓட்டி ரீல்ஸ் வெளியிடுவதில் கவனம் செலுத்துவதாகவும், ஆனால் போதைப்பொருளை ஒழிப்பதில் அத்தகைய ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
'போதை ஒழிப்பை தன்னுடைய அரசிடம் இருந்து முதல்வர் தொடங்க வேண்டும். ஊர் முழுவதும் டாஸ்மாக் பார்களை திறந்து வைத்துவிட்டு, போதைப்பொருளை ஒழிக்கப் போவதாக தவெக அரசு கூறுவது நகைப்புக்குரியது. வெட்கக்கேடானது. அறியா பெண் குழந்தைகளை வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு விரைவான மரண தண்டனை அளிக்க வேண்டும். இது ஒன்றே இத்தகைய கொடுங்குற்றங்களைத் தடுப்பதற்கான ஒரே வழி. இனியாவது வெற்றி விளம்பர அரசியல் செய்வதை தவெக அரசு நிறுத்தி பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என சீமான் வலியுறுத்தியுள்ளார்.