இந்திய கிரிக்கெட் அணியில் முதன்முறையாக 15 வயதில் தேர்வு செய்யப்பட்டுள்ள இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியுடன், அவரது பெற்றோரும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உடன் செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நெகிழ்ச்சியான அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 1989 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயதில் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியில் அறிமுகமானார். அப்போது அவருக்கு ஆதரவாக அவரது அண்ணன் அஜித் டெண்டுல்கர் உடன் சென்றார். தற்போது 37 ஆண்டுகளுக்குப் பிறகு, இதே போன்றதொரு நெகிழ்ச்சியான நிகழ்வு இந்திய கிரிக்கெட்டில் மீண்டும் அரங்கேற உள்ளது.
பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறுகையில், 'வைபவ் இன்னும் ஒரு சிறுவன் என்பதால், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்குச் செல்லும் இந்திய அணியுடன் அவரது பெற்றோரும் உடன் செல்ல அனுமதித்துள்ளோம். புதிய சூழலில் வைபவ் எளிதாகப் பழக அவர்கள் உடன் இருப்பது அவருக்குப் பெரிதும் உதவும். பெற்றோருக்கான ஒட்டுமொத்தப் பயணச் செலவையும் பிசிசிஐ-யே ஏற்கும்' என்று தெரிவித்தார்.
தற்போது இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்தியா ஏ அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச கிரிக்கெட்டின் அடுத்த கட்டத்திற்கு நகர உள்ளதால், அவரது மன உறுதியை அதிகரிக்கவும், தேவையற்ற அழுத்தங்களைக் குறைக்கவும் அவரது பெற்றோர் அருகில் இருப்பது அவருக்கு மிகச் சிறந்த ஆதரவாக இருக்கும் என்று பிசிசிஐ கருதுகிறது. சமீபத்தில் ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியபோது, அணியின் மேலாளர் ரோமி பிந்தர் அவருக்கு ஒரு பாதுகாவலரைப் போல இருந்து வழிநடத்தினார். தற்போது அதைவிடப் பெரிய சர்வதேச அரங்கில் விளையாட உள்ளதால், அவரது பெற்றோரின் நேரடி ஆதரவை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. அசத்தலான திறமையைக் கொண்டுள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு, இந்த முடிவு அவரது ஆட்டத்திறனை மேலும் அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.