திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மேயர் இடத்திலாவது தவெக வெற்றி பெற்றால் தனது ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்வதாக சவால் விடுத்துள்ளார். ஸ்டாலினுக்கோ அல்லது உதயநிதிக்கோ சவால் விடும் தகுதி ஆதவ் அர்ஜுனாவுக்கு இல்லை என்றும், முதல்வர் விஜய்க்கு ஆபத்து வந்தால் அதற்கு ஆதவ் அர்ஜுனாதான் காரணம் என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும் என ப.சிதம்பரம் கூறியிருந்தாலும், திமுக காங்கிரஸிலிருந்து பிரிந்துவிட்டதாக (டைவர்ஸ்) ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். சில கட்சிகள் திமுகவை விட்டுச் சென்றாலும், அவர்கள் ஆலோசனையுடன் சென்றதாகவும், அது ஒரு வகையான பிரிவினை என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால், காங்கிரஸுடனான பிரிவு வேறு வகையானது என்றும் அவர் விளக்கினார்.
எதிர்காலத்தில் முதுகில் குத்திவிட்டுச் சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க மாட்டோம் என்றும், அவர்களுடன் எந்தவிதமான உறவும் கிடையாது என்றும் ஆர்.எஸ்.பாரதி திட்டவட்டமாக கூறினார். கட்சித் தொண்டர்களும் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி எந்த கூட்டணியில் இருக்கிறதோ, அந்தக் கூட்டணியுடன் திமுக இருக்காது என்றும், இனிமேல் காங்கிரஸ் உடன் எந்த உறவும் இல்லை என்றும் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமாக தெரிவித்தார்.