தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் ஸ்ரீநாத், தான் போட்டியிடாத தொகுதியில் நன்றி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஆளும் தரப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மே 29ஆம் தேதி, திருச்செந்துார் வைகாசி விசாக முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் ஸ்ரீநாத், ஆறுமுகனேரி அருகே உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது, புன்னக்காயல் மீனவ கிராமத்தில் த.வெ.க.,விற்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாகவும், அங்கு சென்று நன்றி தெரிவித்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. அழைப்பை ஏற்று புன்னக்காயல் சென்ற அமைச்சர் ஸ்ரீநாத், திறந்த வேனில் நின்றபடி, 'அதிக ஓட்டு வித்தியாசத்தில் என்னை ஜெயிக்க வைத்த இந்த ஊர் மக்களுக்கு கோடான கோடி நன்றிகள்' என பேசினார். ஆனால், புன்னக்காயல் கிராமம் திருச்செந்துார் சட்டமன்ற தொகுதிக்குள் வருகிறது. அந்த தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க., வேட்பாளர் முருகன் தோல்வியடைந்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அமைச்சர் ஸ்ரீநாத் எந்த ஊரில், எந்த தொகுதியில் இருக்கிறார் என்பதே தெரியாமல் நன்றி கூறியதாக நெட்டிசன்கள் அவரை கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர். இது குறித்து அறிக்கை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், 'தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சர், பக்கத்து தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஆனால் ஓட்டு போட்ட மக்களுக்கு யார் எம்.எல்.ஏ. என்றே தெரியாது. இது மாற்றம் இல்லை, ஏமாற்றம்' என விமர்சித்துள்ளார்.
மேலும், 'தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கும், அமைச்சர்களுக்கும், முதல்-அமைச்சருக்கும் அனுபவம், வரலாறு, போராட்டம், தியாகம், பிரச்சனைகள், நிர்வாகம், தொகுதி, தொகுதி மக்கள், அவர்களின் உரிமை, எதிர்பார்ப்பு, ஆளுமை, அதிகாரம், அரவணைப்பு என எதுவுமே தெரியாது. தேர்தலுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படலாம். ஆனால் சட்டம் ஒழுங்கை சீர் செய்வதில் ஒரு நாள் தாமதித்தால் என்ன ஆகும் என்பதை தமிழகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. எதுவுமே தெரியாது, ஆனால் மக்களை ஏமாற்ற மட்டும் விஜய்க்கு தெரியும். விஜய் ஆட்சியில் தமிழ்நாட்டில் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ? காலம் தான் இதற்கு தீர்வு சொல்லும்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.