தமிழகம் முழுவதும் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை எதிர்த்து, டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திட்டத்தின்படி, மது வாங்கும் போது கூடுதலாக ரூ.10 பெற்று, காலி பாட்டிலை திரும்பக் கொடுத்தால் அந்தத் தொகை திரும்ப வழங்கப்படும்.
சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்த உத்தரவிடப்பட்ட நிலையில், இதனை டாஸ்மாக் பணியாளர்களைக் கொண்டே செயல்படுத்தக்கூடாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்திட்டத்தைச் செயல்படுத்த தனி ஊழியர்களை நியமிப்பதாக முன்னர் அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர்.
ஆனால், தற்போது காலி மது பாட்டில் திட்டத்தை கடைப் பணியாளர்கள் மூலமே செயல்படுத்த உத்தரவிட்டதாகக் கூறி, சென்னை மண்டலம் மற்றும் திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த டாஸ்மாக் பணியாளர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பும் அவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயலாளர் மணிகண்டன் கூறுகையில், 'புதிய அரசு அமைந்துள்ளதால், கால அவகாசம் கோரியுள்ளனர். மேலும், பணியாளர்களுக்கு சாதகமான நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். மேலாண் இயக்குநரின் உறுதியைத் தொடர்ந்து கடையடைப்பு போராட்டத்தை தற்போதைக்கு வாபஸ் பெற்றுள்ளோம்' என்றார்.