நடிகர் அர்ஜுன், 'பிளாஸ்ட்' திரைப்படத்தில் முதன்முறையாக கராத்தே மாஸ்டராக நடித்துள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், சுபாஷ் கே.ராஜ் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் அர்ஜுனுடன் அபிராமி, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் 28ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தில் ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைக்க, அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வீரமணி கணேசன் அரங்க பணிகளை மேற்கொண்டுள்ளார். கல்பாத்தி எஸ்.அகோரம், எஸ்.கணேஷ், எஸ்.சுரேஷ், அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
படம் குறித்து நடிகர் அர்ஜுன் கூறுகையில், '150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நான், இந்த 'பிளாஸ்ட்' படத்தில் தான் முதல்முறையாக கராத்தே மாஸ்டராக நடித்துள்ளேன். இங்குள்ள இளம் திறமையாளர்களிடம் இருந்து பல புது விஷயங்களை கற்றுக்கொண்டேன்' என தெரிவித்தார்.
மேலும் அவர், 'இந்த படத்தில் அபிராமியும், பிரீத்தி முகுந்தனும் சண்டைக் காட்சிகளில் மிகவும் ஆக்ரோஷமாக நடித்ததைப் பார்த்து, ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படும் நானே பயந்துவிட்டேன். அவர்கள் என்னை ஓவர்டேக் செய்துவிடுவார்களோ என்று ஒரு நிமிடம் நடுக்கம் ஏற்பட்டது. ஸ்டண்ட் மாஸ்டர் பிரபுவின் கடின உழைப்புக்கு எனது பாராட்டுகள்' என்றும் கூறினார்.