ஓமனில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்ற நிலையில், போட்டியின் போது ஏற்பட்ட அனுபவங்களை இந்திய வீரர் ஆர்யவீர் சேவாக் பகிர்ந்துள்ளார். இந்தப் போட்டி குறித்து பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் அவர் மனம் திறந்து பேசினார்.
சனிக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, உஸ்மான் கான் 107 ரன்கள், அப்துல் காதிர் 80 ரன்கள் எடுக்க, 9 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, கேப்டன் லக்ஷ்யா ராய்சந்தானி மற்றும் ஆர்யவீர் சேவாக் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். இதில் லக்ஷ்யா 80 ரன்களும், ஆர்யவீர் 61 பந்துகளில் 58 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி 252 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியான சூழலை சந்தித்தபோது, மனல் சவுகான் 32 பந்துகளில் 47 ரன்கள் விளாசி நம்பிக்கை அளித்தார். அவருடன் இணைந்த மோகித் உல்வா, கடைசி பந்தில் பவுண்டரி அடித்து, 26 பந்துகளில் 49 ரன்களுடன் இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். சிகுருபதி வெங்கடா 11 ரன்களுடன் அவருக்கு உறுதுணையாக இருந்தார்.
போட்டியின் போது தான் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, கையில் பந்து பட்டதால் மரத்துப்போனதாகவும், வீக்கம் ஏற்பட்டதாகவும் ஆர்யவீர் சேவாக் தெரிவித்தார். இது தனது கடைசி 19 வயதுக்குட்பட்டோர் தொடர் என்பதால், பாகிஸ்தானுக்கு எதிரான இந்த இறுதிப்போட்டியில் வலியையும் தாண்டி இந்திய அணிக்காக விளையாடியதாக அவர் கூறினார்.
மேலும், 32வது ஓவரில் இருந்து 'சீதாராம், சீதாராம்' என கடவுளின் பெயரை உச்சரித்து மனதை அமைதிப்படுத்தியதாக ஆர்யவீர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். கேப்டன் லக்ஷ்யாவும் இதேபோல் கடவுள் பெயரை சொல்லி வேண்டியதாகவும், அணியின் அனைத்து வீரர்களும் வெற்றியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த 19 வயதுக்குட்பட்டோர் ஆசிய கோப்பை தொடரில், ஆர்யவீர் சேவாக் 5 போட்டிகளில் விளையாடி 1 சதம், 3 அரைசதங்களுடன் மொத்தம் 361 ரன்கள் குவித்தார். 90.25 சராசரியுடன், தொடரில் அதிகபட்சமாக 16 சிக்ஸர்களை அடித்த அவர், தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
கேப்டன் லக்ஷ்யா ராய்சந்தானி, முதல் மூன்று இன்னிங்ஸ்களில் வெறும் 70 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அரையிறுதியில் 93 ரன்களையும், இறுதிப்போட்டியில் 80 ரன்களையும் குவித்தது ஒரு உணர்ச்சிப்பூர்வமான பயணமாக இருந்ததாகக் கூறினார். இத்தொடரில் மொத்தம் 243 ரன்கள் எடுத்த அவர், நெருக்கடியான ஆட்டங்களில் எப்படி அமைதியாக விளையாடுவது என்பதைக் கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
கடுமையான போட்டி நிறைந்த இந்த இறுதிப் போட்டியில், தனிப்பட்ட வலியைப் பொருட்படுத்தாமல், நாட்டின் வெற்றிக்காகப் போராடிய ஆர்யவீர் சேவாக்கின் அர்ப்பணிப்பு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. இந்திய அணியின் இந்த வெற்றி, வருங்கால கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு உத்வேகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
