சென்னை: முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த உத்தரவு சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக் குழுவின் பரிசீலனையில் இருப்பதால் படத்தின் வெளியீடு தாமதமானது. இதனிடையே, கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி இந்தப் படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானது. இது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சார்பில் சென்னை சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீநாத், சஞ்சய், பாலகிருஷ்ணன், மணிகண்டன், ருத்ரன், ராஜேஷ், பிரசாந்த், செல்வம் மற்றும் ரஜினி ஆகிய 9 பேர், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.சக்திவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
விசாரணையின்போது, படத்தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், ‘இந்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கின் முக்கிய குற்றவாளிகள் பலர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். எனவே, இந்த 9 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது’ என்று கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.