முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெகவிற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திருநெல்வேலியில் நடைபெற்ற சங்கத்தின் மாநாட்டில் அதன் மாநிலத் தலைவர் நாராயணன் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
இதுவரை எந்தவொரு சாதிய அமைப்பும் நேரடியாக தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில், முதல்முறையாகப் பிராமணர் சங்கம் தனது ஆதரவை பகிரங்கமாகத் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில மாநாடு, நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், முற்பட்டோர் நலவாரியம் அமைக்க வேண்டும், கோயில் நிர்வாகத்துக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும், அர்ச்சகர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் மாநில தலைவர் நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 'மதச்சார்பின்மை பேசும் அரசு ஹிந்து கோயில்களை மட்டும் நிர்வகிப்பது சரியல்ல. இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களுக்கு தனி நிர்வாக அமைப்புகள் இருப்பதைப் போன்று, கோயில்களுக்கும் தனி வாரியம் அமைக்க வேண்டும். இதன் மூலம் கோயில் நிர்வாகக் குளறுபடிகளைச் சரிசெய்ய முடியும்' எனத் தெரிவித்தார்.
மேலும், 'முதல்வர் ஜோசப் விஜய் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அவர் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்ய வேண்டும். பெரும்பான்மை இல்லாததால் பல்வேறு அரசியல் கட்சிகள் அவரை மிரட்டி வருகின்றன' என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள 5 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களிலும் த.வெ.க.,வுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம் என்றும் பிராமணர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த ஆதரவு தவெகவிற்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
