உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் திருக்கோவிலில், முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாக திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. முருகனின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான இது, பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை உற்சவர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த பத்து நாள் விழாவிலும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும். குறிப்பாக, விழாவின் ஆறாம் நாளான மே 29ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு மேல், பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் வெகுசிறப்பாக நடைபெறும்.
வைகாசி மாத பௌர்ணமியில், விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த புனிதமான நாளை முன்னிட்டு, பழனி கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை காலை 8:30 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம், வைகாசி விசாக நாளன்று (மே 30) மாலை 4:30 மணிக்கு நடைபெறுகிறது. பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். ஜூன் 2ஆம் தேதி கொடி இறக்குதலுடன் இந்த வைகாசி விசாக திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.