16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். குழந்தைகளின் உடல்நலம், மனநலம், கல்வி மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைப் பின்பற்றி மத்திய அரசு உடனடியாகச் சட்டம் இயற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூக ஊடகங்களின் அதீத பயன்பாடு, குழந்தைகளிடையே மனஅழுத்தம், கவனச் சிதறல், இணையவழித் துன்புறுத்தல், உடல்நலப் பாதிப்புகள் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாக அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், வாசிப்பு மற்றும் விளையாட்டுப் பழக்கங்கள் குறைந்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
குழந்தைகளை சமூக ஊடகங்களின் பிடியிலிருந்து விடுவிக்க, 16 வயதுக்குட்பட்டோரின் சமூக ஊடகப் பயன்பாட்டை சட்டப்பூர்வமாகத் தடை செய்வதே நிரந்தரத் தீர்வாக அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், மனநலம் மற்றும் உடல்நலப் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. இதேபோல், ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், இந்தோனேசியா போன்ற நாடுகளும் இத்தகைய தடைகளைச் செயல்படுத்தியுள்ளன.
சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அதிகம் அடிமையாகும் இந்தியாவில், இந்தத் தடையை முன்னெடுப்பது அவசியமாகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் பதற்றம், மன அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு சமூக ஊடகங்களே முக்கியக் காரணம் என்றும், இதன் விளைவாக அவர்கள் உடல்திறன் சார்ந்த விளையாட்டுகளை மறந்துவிட்டதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
எனவே, குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து மீட்க மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
