தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 100 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக எழுந்த புகாரில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் மற்றும் பொருளாளர் முத்துக்குமார் ஆகியோர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் திமுக ஆட்சிக் காலத்தில் இந்த முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்தனர். இந்த விசாரணையின் தொடர்ச்சியாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பி.டி. அரசகுமார், பதிவு செய்யப்படாத தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனத் தலைவராக உள்ளார். இவரே இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு உதவியதாகக் கூறப்படும் சங்கத்தின் பொருளாளர் முத்துக்குமாரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் தவிர மேலும் சிலரும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.