மத்திய பிரதேசத்தில், யூடியூபர் ஒருவர் தனது வீட்டைக் காட்டி வெளியிட்ட வீடியோ, அவருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள மோகனி கிராமத்தைச் சேர்ந்த யூடியூபர் ரச்னா குர்ஜார், தனது வீட்டில் குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்தபோது, அதிகாலை 2 மணியளவில் இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது. அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைந்து, குர்ஜார் மற்றும் அவரது குடும்பத்தினரை ஒரு அறைக்குள் பூட்டிவிட்டு, பின்னர் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 8 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கொள்ளையர்கள் தங்கள் முகங்கள் பதிவாகாதபடி சிசிடிவி கேமராக்களின் கோணங்களையும் மாற்றியுள்ளனர்.
இது தொடர்பாக குர்ஜார் நார்வார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிவ்புரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் முலே, கொள்ளைச் சம்பவத்தை உறுதிசெய்துள்ளதோடு, இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்ட யூடியூபரான குர்ஜார், சமீபத்தில் தனது வீடு, நகைகள், பணம் மற்றும் வாழ்க்கை முறையைக் காட்டும் 'Home Tour' வீடியோக்களைப் பதிவிட்டிருந்தார். இதில், அவர் தனது வீட்டின் பல்வேறு பகுதிகள், நகைகள் மற்றும் பணம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளார்.
கொள்ளையர்கள் இந்த வீடியோக்களைப் பார்த்து, அதன் மூலம் கிடைத்த தகவல்களைப் பயன்படுத்தி குற்றத்தைத் திட்டமிட்டிருக்கலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன. யூடியூபர் வெளியிட்ட வீடியோவால் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவம், சமூக வலைதளங்களில் கவனக்குறைவாக தகவல்களைப் பகிர்வது குறித்து எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.