8.7 கோடி இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்: மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி.

கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி என எவ்விதமான வாய்ப்புகளும் இன்றி 8 கோடியே 70 லட்சம் இளைஞர்கள் முடங்கிக் கிடப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '2014 முதல் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு, ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்குவதாக வெற்று வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி வந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 2026-ல் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையின்படி, 15 முதல் 29 வயதுக்குட்பட்ட 8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பு அல்லது தொழிற்பயிற்சி எதிலும் ஈடுபடாமல் முடங்கியுள்ளதாகவும், மேலும் 79.6 கோடி பேர் உழைக்கும் சந்தைக்கு வெளியே தள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது.

படித்த பட்டதாரிகளில் வெறும் 8.25 சதவீதம் பேருக்கு மட்டுமே அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைத்துள்ளது என்ற அதிர்ச்சிகரமான தகவலையும், பட்டம் பெற்ற பெண்களிடையே 20.4 சதவீதம் வேலையின்மை நிலவுவதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இது மோடி அரசின் விளம்பர அரசியலின் உண்மை முகத்தைக் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

'ஒருபுறம் மருத்துவக் கனவைச் சிதைக்கும் மருத்துவ நீட் தேர்வு என்றால், மறுபுறம் இளைஞர்களை வேலைக்கே செல்லவிடாமல் நடுத்தெருவில் நிறுத்தும் சமூக-பொருளாதார நீட் நெருக்கடி நிலவுகிறது' என மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது செப்டம்பர் 2026-ல் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்டுள்ள மாவட்ட அளவிலான PLFS அறிக்கை, இந்த அவல நிலையை உள்ளூர் அளவிலும் தோலுரித்துக் காட்டியுள்ளது. நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 25 சதவீதத்திற்கும் அதிகமான இளைஞர்கள் கல்வி அல்லது வேலைவாய்ப்பின்றி முடங்கிக் கிடக்கின்றனர். மொத்தமாக ஆய்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் கிட்டத்தட்ட 23.7 சதவீதம் பகுதிகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமான இளைஞர்கள் எவ்வித எதிர்காலமும் இன்றி தவிக்கின்றனர்.

குறிப்பாக, உத்தரப்பிரதேசம், பீகார், ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களின் பெரும்பாலான மாவட்டங்கள் வேலையின்மையால் தத்தளிப்பதுடன், 75 சதவீதம் மாவட்டங்களில் இளம்பெண்களின் வேலையின்மை விகிதம் 25 சதவீதத்தை தாண்டியுள்ளது.

மோடி அரசின் இந்த நிர்வாகத் தோல்வியும், புறக்கணிப்பும் தமிழ்நாட்டிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தென் தமிழ்நாட்டின் முக்கிய நகரமான மதுரையில் வேலையின்மை விகிதம் 7.0 சதவீதமாக உயர்ந்துள்ளது. திருவள்ளூரில் 24.9 சதவீதம், திருச்சியில் 23.9 சதவீதம், மதுரையில் 23.8 சதவீதம், சென்னையில் 22.4 சதவீதம் என இளைஞர்கள் முறையான வாழ்வாதார வழியின்றி முடங்கியுள்ளனர்.

மேலும், கிராமப்புற தமிழ்நாட்டில் நிலையான ஊதிய வேலைகள் கிடைக்காததால், 30.4 சதவீதம் குடும்பங்கள் முறைசாரா தினக்கூலி வேலைகளையே நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சியை வழங்குவதாகக் கூறி புதிய கல்விக் கொள்கையை (NEP) திணிக்கும் மத்திய அரசு, களத்தில் அவர்களுக்குக் கண்ணியமான வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறிவிட்டது என்று அவர் விமர்சித்துள்ளார்.

தேசிய அளவில் 8.7 கோடி இளைஞர்களின் வாழ்வைச் சூறையாடியதோடு, மாவட்ட வாரியாகப் பல கோடி இளைஞர்களின் உழைப்பையும் ஆற்றலையும் வீணடித்து நடுத்தெருவில் நிறுத்தியுள்ள மோடி அரசின் பொருளாதாரத் துரோகங்களுக்கு, தங்களின் எதிர்காலத்தை இழந்து தவிக்கும் இந்த இளைய தலைமுறை ஒருபோதும் துணை நிற்காது என்றும் மாணிக்கம் தாகூர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version