திண்டுக்கல்-பழனி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் அரிவாளை சுழற்றியபடி சென்ற இரு வாலிபர்களை திண்டுக்கல் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
முத்தனம்பட்டி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது, வாலிபர்கள் சிலர் கையில் அரிவாளை வைத்துக்கொண்டு சுழற்றியதாக கூறப்படுகிறது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதை அடுத்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனடியாக இதில் தலையிட்டார். அவர் உத்தரவின் பேரில், ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. கார்த்திகேயன் மேற்பார்வையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான குழு, சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தது. இந்த கேமரா பதிவுகளை கொண்டு, குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில், மாங்கரையைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கோகுல்குமார் (24 வயது) மற்றும் முருகன் மகன் துளசி (25 வயது) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் நெடுஞ்சாலையில் அரிவாளை காட்டி அச்சறுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், அவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும், இந்த சம்பவத்திற்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெடுஞ்சாலையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

