யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு 5 போட்டிகள் முதல் ஆயுள்தடை வரை தண்டனை?

மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை வீரர் அசிதா பெர்னாண்டோவுடன் மோதலில் ஈடுபட்ட இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு, 5 டெஸ்ட் போட்டிகள் முதல் ஆயுள் காலம் வரை தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது டெஸ்டின் முதல் நாளில், 17வது ஓவரின் கடைசி பந்தில் அசிதா பெர்னாண்டோ வீசிய பந்தில் ஜெய்ஸ்வால் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விக்கெட் வீழ்ந்தபோது இரு வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்து ஒருவரையொருவர் முட்டிக்கொள்ளும் அளவுக்கு சென்றது. சக வீரர் தேவ்தத் படிக்கல் சமாதானப்படுத்த முயன்றும், ஜெய்ஸ்வால் கட்டுக்கடங்காமல் பெர்னாண்டோவை நோக்கி ஆக்ரோஷமாகச் சென்றார். இதனால் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சர்வதேச போட்டிகளின் போது சக வீரரைத் தாக்குவது அல்லது வன்முறையில் ஈடுபடுவது ஐசிசி விதிமுறைகளின் கீழ் லெவல் 4 குற்றமாகக் கருதப்படுகிறது. ஐசிசி நடத்தை விதிகளின் கீழ் மிகவும் கடுமையான குற்றங்களாக இவை கருதப்படுகின்றன. நடுவர்கள், போட்டி நடுவர் அல்லது சக வீரர்களைத் தாக்குவது போன்ற செயல்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.

ஐசிசி நடத்தை விதிமுறைகளின் பிரிவு 2.18 மற்றும் 2.19 இன் படி, மைதானத்தில் வன்முறையில் ஈடுபடும் வீரருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும். இதன் கீழ், குறைந்தபட்சம் 5 டெஸ்ட் போட்டிகள் அல்லது 10 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம். குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து ஆயுட்காலத் தடை வரை விதிக்கவும் ஐசிசி விதிகளில் இடம் உள்ளது.

ஜெய்ஸ்வால் இதுபோன்ற ஒழுங்கீனச் செயலில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. கடந்த 2022 துலீப் கோப்பை இறுதிப் போட்டியின் போது, ​​தெற்கு மண்டல வீரர் ரவி தேஜாவுடன் ஜெய்ஸ்வால் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டார். அப்போது நடுவர்கள் எச்சரித்தும் அவர் கேட்காததால், மேற்கு மண்டல கேப்டன் அஜின்கியா ரஹானே தலையிட்டு ஜெய்ஸ்வாலை மைதானத்தில் இருந்து வெளியேற்றினார்.

அப்போது போட்டி நடுவர் ஜெய்ஸ்வாலுக்கு 4 போட்டிகள் தடை விதிக்கத் தயாராக இருந்தார். ஆனால் ரஹானே தனது சக வீரரைக் கண்டித்ததை அடுத்து அந்தத் தண்டனை ரத்து செய்யப்பட்டது. அந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் 265 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். பின்னர் 2023 இல் அவர் இந்திய அணியிலும் அறிமுகமானார்.

தற்போது மீண்டும் மைதானத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டதால் ஜெய்ஸ்வாலுக்கு தண்டனை வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. அவரை சீண்டிய இலங்கை வீரருக்கும் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோதல் ஐசிசி விதிமுறைகளின்படி விசாரிக்கப்படும் என்றும், அதன் அடிப்படையில் ஜெய்ஸ்வால் மற்றும் பெர்னாண்டோ இருவருக்கும் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் வீரர்களின் ஒழுக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version