உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் குடும்ப தகராறில் கணவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபூர் கிராமத்தைச் சேர்ந்த அவதேஷ் (49) மற்றும் அவரது மனைவி பிரித்தி தேவி (45) தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. அவதேஷ் மது அருந்தும் பழக்கம் கொண்டவர். நேற்று இரவு, 100 ரூபாய் பணம் தொடர்பாக கணவன்-மனைவி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் போது, பிரித்தி தேவியை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிரித்தி தேவி, கணவர் அவதேஷ் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். நள்ளிரவில் வீட்டில் இருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவதேஷ் உடல் முழுவதும் தீயில் எரிந்து கருகிய நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதலில் இது தற்கொலை என நாடகமாடப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பெட்ரோல் பாட்டில் ஆகியவற்றை ஆதாரங்களாகக் கொண்டு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மனைவி பிரித்தி தேவி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதன் அடிப்படையில், போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெறும் 100 ரூபாய் பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கணவனையே மனைவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

