அதிமுகவின் சட்டமன்ற குழுத் தலைவர் யார்? – சபாநாயகரின் முடிவு என்னவாக இருக்கும்?

அதிமுகவில் தற்போது ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற குழுத் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என ஒரு தரப்பும், எஸ்.பி.வேலுமணிதான் என மற்றொரு தரப்பும் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளன. இந்த விஷயத்தில் முதலில் முடிவு எடுக்க வேண்டியவர் சபாநாயகர்தான். ஏனெனில், கட்சி கொறடா யார் என்பதை முடிவு செய்து அறிவிக்கும் அதிகாரம் அவருக்கே உள்ளது. ஆனால், இதில் ஒரு பெரிய சிக்கல் உள்ளது. இரு தரப்பினரும் தங்களுக்கு ஆதரவாக கையெழுத்திட்ட கடிதங்களை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளனர். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தனக்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், அதற்கான கையெழுத்துக்களுடனும் கடிதம் அளித்துள்ளார். அதேபோல், எஸ்.பி.வேலுமணியும் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கையெழுத்துக்களுடன் கடிதம் கொடுத்துள்ளார். அதாவது, இரு கடிதங்களிலும் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துக்கள் உள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் சபாநாயகர் எடுக்கப்போகும் முடிவே, சட்டசபையில் அதிமுகவின் தலைமை யார் என்பதைத் தீர்மானிக்கும். எனினும், சபாநாயகர் என்ன முடிவு எடுக்க வேண்டும், எப்போது எடுக்க வேண்டும் என்பதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. இது அவரது தனிப்பட்ட அதிகாரப்பூர்வ முடிவு. தற்போதுள்ள சிக்கல் காரணமாக, அவர் இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதை தாமதப்படுத்தலாம். அல்லது எடப்பாடி பழனிசாமி – வேலுமணி தரப்பில் ஒருவருக்கு ஆதரவாக முடிவை அறிவிக்கலாம். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக முடிவு வந்தால், கொறடாவின் உத்தரவுப்படி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் த.வெ.க.வுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். மீறினால், கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்களின் எம்.எல்.ஏ. பதவியும் பறிபோகும் நிலை ஏற்படலாம். ஒருவேளை வேலுமணிக்கு ஆதரவான முடிவு வந்தால், அவரது ஆதரவாளர்களான பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். அவர்களைத் தடுக்க முடியாது. இந்த இரண்டு அம்சங்களைத் தவிர, சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காமல் போனால், கட்சி விதிகளின்படி, கட்சியின் கொறடா எடுக்கும் முடிவுக்கு எம்.எல்.ஏ.க்கள் கட்டுப்பட வேண்டும். இல்லையெனில், அவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டம் பாயலாம். சிலர் அதிமுகவை இரண்டு அணிகளாகப் பிரித்து செயல்பட வைக்கலாம் என்றும் கூறுகின்றனர். ஆனால், சட்ட நிபுணர்களின் கருத்துப்படி, ஒரு கட்சியை சபாநாயகர் இரண்டாகப் பிரிக்க முடியாது. அவர் 'சட்டமன்றக் கட்சித் தலைவர்' மற்றும் 'கொறடா' ஆகியோரை மட்டுமே அங்கீகரிக்க முடியும். கட்சியில் பிளவு ஏற்பட்டால், தேர்தல் ஆணையத்தின் முடிவே இறுதியானது என்றும் அவர்கள் கூறுகின்றனர். மற்றொரு கோணத்தில், வேலுமணி தரப்புக்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு, அதாவது 32 எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிணைந்து த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தால், அவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டம் பாயாது. சபாநாயகர் முடிவெடுப்பதில் காலதாமதம் செய்யலாம் என்பது நடைமுறையில் இருந்தாலும், உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் 'நியாயமான காலத்திற்குள்' முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சபாநாயகர் எடுக்கப்போகும் இந்த முடிவு, நாளைய அதிமுகவின் தலைமை யார் என்பதைத் தீர்மானிப்பதற்கும் ஒரு முக்கிய தொடக்கமாக அமையலாம்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version