முட்டை நீக்கம்: மேற்கு வங்க மதிய உணவு திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

மேற்கு வங்கத்தில் அரசு பள்ளிகளுக்கான மதிய உணவு திட்டத்தை இஸ்கான் அமைப்பிடம் அம்மாநில அரசு ஒப்படைத்ததை தொடர்ந்து, மாணவர்களுக்கான முட்டை உணவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் பொறுப்பை இஸ்கான் அமைப்பு ஏற்கும் என முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்திருந்தார். இஸ்கான் வழங்கும் மதிய உணவு தூய்மையான, சாத்விக உணவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச கிருஷ்ண உணர்வு சங்கத்தின் (International Society for Krishna Consciousness) அன்னமித்ரா அறக்கட்டளை மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இஸ்கான் ஏற்கனவே எட்டுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் 22 நகரங்களில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி, நாடு முழுவதும் சுமார் 12 லட்சம் மாணவர்களுக்கு சேவை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, மேற்கு வங்கத்தில் மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை முட்டை வழங்கப்பட்டு வந்தது. தற்போது, முட்டைக்கு பதிலாக சோயா அல்லது பனீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம், குழந்தைகளின் ஊட்டச்சத்தைப் பறிக்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. தற்போதுள்ள திட்டத்தின்படி, மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் முட்டையும், மற்ற பள்ளி நாட்களில் சாதம், பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு குழம்பும் வழங்கப்படுகின்றன.

இந்த திடீர் மாற்றத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல் எடுக்கப்பட்ட இந்த முடிவு வருந்தத்தக்கது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து அரசு தரப்பில் இருந்து மேலும் விளக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version