உலக நன்மைக்காக இந்தியா-அமெரிக்கா கைகோர்ப்பு: மோடி, ரூபியோ சந்திப்பு

புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். இந்தப் சந்திப்பின்போது, உலக நன்மைக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து நெருக்கமான உறவைப் பேணும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, பாதுகாப்பு, தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, கல்வி போன்ற பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், மேற்கு ஆசிய நிலவரம் உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ரூபியோ பிரதமர் மோடிக்கு விளக்கினார். இந்தப் பிராந்திய மற்றும் உலக அமைதி முயற்சிகளுக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார். பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் மோதல்களுக்கு தீர்வு காண வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை அவர் வலியுறுத்தினார்.

மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்ச்சியான உயர்மட்டக் கலந்துரையாடல்களை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தப் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பதிவில், 'அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை வரவேற்றதில் மகிழ்ச்சி. இந்தியா – அமெரிக்கா இடையேயான ஆழமான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், பிராந்திய மற்றும் உலக அமைதி, பாதுகாப்பு குறித்து விவாதித்தோம். உலக நன்மைக்காக இரு நாடுகளும் தொடர்ந்து நெருக்கமாகச் செயல்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், இந்தப் சந்திப்பு குறித்து வெளியிட்ட பதிவில், 'வெள்ளை மாளிகைக்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சார்பில் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அழைப்பு விடுத்தார். பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அமெரிக்கா – இந்தியா இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற்றது. இந்தத் துறைகள் நமது இரு நாடுகளையும், சுதந்திரமான இந்தோ-பசுபிக் பகுதியையும் வலுப்படுத்துகின்றன. இந்தியா அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி' என்று தெரிவித்துள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version