விராட் கோலியின் அறிவுரை: ஃபில் சால்ட் நெகிழ்ச்சி!

கிரிக்கெட் வீரர் ஃபில் சால்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியுடன் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் குறித்தும், அவர் தனக்கு வழங்கிய அதிரடி அறிவுரை குறித்தும் இங்கிலாந்து வீரர் ஃபில் சால்ட் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விராட் கோலியும், ஃபில் சால்ட்டும் கடந்த இரண்டு சீசன்களாகத் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கி அணிக்கு அடுத்தடுத்து கோப்பைகளை வென்று தந்துள்ளனர். 2026 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியின் போது நடந்த சுவாரசியமான சம்பவத்தை சால்ட் நினைவு கூர்ந்துள்ளார்.

அந்தப் போட்டியில் ரன் குவிக்க இருவரும் தடுமாறிய போது, விராட் கோலி அவரிடம் வந்து, 'அவன் கதையை முடித்து விடு' என்று ஒற்றை வார்த்தையில் உத்வேகம் அளித்துள்ளார். இது குறித்துப் பேசிய சால்ட், 'நாங்கள் ரன் குவிக்கத் தடுமாறிக் கொண்டிருந்தோம். அப்போது கோலி என்னிடம் வந்து, அவன் கதையை முடி… இந்த ஓவரை பெரிய ஓவராக மாற்று என்று கூறினார். அது எனக்கு மிகப்பெரிய தெளிவையும், நம்பிக்கையையும் தந்தது. அந்த ஓவரில் நாங்கள் 20-க்கும் அதிகமான ரன்களைக் குவித்தோம்' என்று கூறினார்.

மேலும், கால்பந்து போட்டிகளில் கெவின் டி புருய்னே மற்றும் எர்லிங் ஹாலண்ட் ஜோடிக்கு இடையே இருக்கும் புரிந்துணர்வு போன்ற ஒரு கெமிஸ்ட்ரி எங்களிடையே இருந்தது. நான் பார்த்த மிகச்சிறந்த முழுமையான கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் ஃபில் சால்ட்.

2026 ஐபிஎல் தொடரில் விராட் கோலி 16 போட்டிகளில் விளையாடி 1 சதம், 5 அரைசதங்களுடன் 675 ரன்கள் குவித்தார். அவரது சராசரி 56.25 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 165.84 ஆகவும் இருந்தது. இறுதிப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து பெங்களூரு அணி 156 ரன்கள் இலக்கை எட்டி சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

மேலும் ஐபிஎல் வரலாற்றில் 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்ற கோலி, தற்போது 275 இன்னிங்ஸ்களில் 9 சதங்கள், 68 அரைசதங்களுடன் 9,336 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது தொடை தசைநார் காயத்தால் அவதிப்பட்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரைத் தவறவிட்ட கோலி, தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டிற்குத் திரும்புகிறார். இந்த போட்டிகள் பர்மிங்காம், கார்டிஃப் மற்றும் லார்ட்ஸ் மைதானங்களில் நடைபெறவுள்ளன.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version