நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வெளிப்படுத்திய அதிரடியான ஆட்டம் குறித்து, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்திருந்தால் அல்லது நியூசிலாந்து நிர்ணயித்த இலக்கு பெரியதாக இருந்திருந்தால், விராட் கோலி இதேபோன்ற அதிரடியை வெளிப்படுத்தியிருப்பாரா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணி, நியூசிலாந்து அணியை 40.2 ஓவர்களில் வெறும் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது. இந்திய பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும், குர்னூர் பிரார் 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், அன்ஷுல் கம்போஜ் 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர், மழை குறுக்கிட்டதால், இந்திய அணியின் வெற்றி இலக்கு முதலில் 40 ஓவர்களில் 167 ரன்களாகவும், பின்னர் அது மேலும் குறைக்கப்பட்டு 32 ஓவர்களில் 143 ரன்களாகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த சிறிய இலக்கை நோக்கி களமிறங்கிய விராட் கோலி, மின்னல் வேகத்தில் விளையாடினார். 145.09 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 51 பந்துகளை எதிர்கொண்ட அவர், 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி 74 ரன்கள் குவித்தார். இதில், வெறும் 35 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவு செய்து அசத்தினார். கோலியின் இந்த அதிரடி ஆட்டத்தின் உதவியுடன், இந்திய அணி 22.4 ஓவர்களிலேயே, அதாவது 56 பந்துகள் மீதமிருந்த நிலையில் 143 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டி, போட்டியில் வெற்றி பெற்றது.
போட்டிக்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜேக்கப் டஃபி, 'நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து ஒரு பெரிய ஸ்கோரை எடுத்திருந்தால், அப்போது விராட் கோலி இதேபோல் விளையாடுவாரா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருந்திருக்கும். அவர் அப்படி விளையாடுவாரா என்று எனக்குத் தெரியவில்லை. பெங்களூரு வலைப்பயிற்சியில் சில விஷயங்களை நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன், ஆனால் அந்த மனிதனின் ஆட்டத்தில் பெரிய குறைகள் எதுவும் இல்லை' என்று கூறினார்.
மேலும் பேசிய டஃபி, 'சிறிய மைதானங்களில் வேகப்பந்தை அவர் மிகச் சிறப்பாக பயன்படுத்துகிறார். வேறு சூழ்நிலைகளில் கோலியின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பது குறித்து கேள்வி எழுப்பினாலும், அவரது ஆட்டத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன். ஐபிஎல் 2026 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அவருடன் இணைந்து விளையாடியுள்ளேன். வலைப்பயிற்சியில் அவருக்கு நான் அதிக அளவில் பந்துவீசியுள்ளேன்' என்றும் தெரிவித்தார்.
'சிறிய இலக்கை விரட்டும்போது ஒரு வீரர் இதுபோன்ற தீவிரமான அணுகுமுறையுடன் களமிறங்கினால், அது வேலையை மிகவும் எளிதாக்கிவிடும். அதற்கு அவர்தான் சரியான நபர். பவுன்ஸ் பந்துகளை அவர் எதிர்கொண்ட விதம் மற்றும் ஹுக், புல் ஷாட்களை ஆடிய விதம் மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்தது. அவர் ஒரு சிறந்த வீரர், பல ஆண்டுகளாக இதைத்தான் செய்து வருகிறார். பெங்களூரு வலைப்பயிற்சியிலும் எனக்கு எதிராக அவர் இதைத்தான் செய்தார்' என டஃபி தனது பாராட்டுகளைத் தொடர்ந்தார்.
விராட் கோலியின் இந்த அரைசதம், ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 80-வது அரைசதம் ஆகும். மேலும், வெளிநாட்டு மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 50 முறை 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த முதல் பேட்டர் என்ற வரலாற்றுச் சாதனையும் விராட் கோலி இந்தப் போட்டியின் மூலம் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
