இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் 9 பேர் மற்றும் அவர்களது மீன்பிடி படகை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில், கடந்த ஆகஸ்ட் 12, 2026 அன்று இரவு, IND-TN-10-MM-329 என்ற பதிவு எண்ணைக் கொண்ட மீன்பிடி இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் தனிப்பட்ட கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாக தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இது போன்ற இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது மிகுந்த கவலையையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாகவும், இதுவரை 49 இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்து, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் விரைவாக விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாகத் தாய்நாடு திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால், தாங்கள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பது, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கும், தமிழ்நாட்டு மீனவ சமூகத்தினருக்கும் பெரும் நம்பிக்கையையும் நிம்மதியையும் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் உடனடித் தலையீட்டை எதிர்பார்ப்பதாகவும் முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

