வாட்ஸ்அப் மோசடி: ‘நோ’ சொன்னாலும் பணம் பறிப்பு – சைபர் போலீஸ் எச்சரிக்கை

சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

தொடர்ந்து புதிய வடிவங்களில் டிஜிட்டல் மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில், தற்போது வாட்ஸ்அப் மூலம் புதிய வகை பண மோசடி நடைபெற்று வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல், அதிநவீன ஆப்கள் மூலமும், பயமுறுத்தும் செய்திகள் மூலமும் மக்களை குறிவைக்கிறது. இந்த மோசடிகளில் படித்தவர்கள், பாமரர்கள் என அனைவரும் ஏமாந்து பணத்தை இழக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.

தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய மோசடி, வாட்ஸ்அப் பேங்கிங் முறையைப் பயன்படுத்தி நடைபெறுகிறது. இதில், வாட்ஸ்அப் மூலம் ஆட்டோ எக்ஸிகியூஷன் ஃபைல் (Auto Execution File) தாக்குதல் நடத்தப்படுகிறது. இதன் மூலம், நீங்கள் எந்தவொரு லிங்க்கையும் கிளிக் செய்யாமலோ அல்லது உங்கள் ஓடிபி எண்ணைப் பகிராமலோ இருந்தாலும்கூட, உங்கள் மொபைல் போனை ஹேக் செய்து பணத்தை அபகரிக்க மோசடி நபர்கள் வழி கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மோசடி எப்படி நடக்கிறது என்றால், முதலில் உங்கள் வாட்ஸ்அப் எண்ணுக்கு, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக ஒரு போலி செய்தி வரும். உதாரணமாக, 'ரூ. 50 ஆயிரம் எடுக்கப்பட்டது' என்பது போன்ற செய்தி இது. இந்தச் செய்தி வந்த உடனேயே, அடுத்ததாக ஒரு செய்தி வரும். அதில், 'இந்த பரிவர்த்தனையை நீங்கள் செய்யவில்லை என்றால், தயவுசெய்து 'நோ' என்று பதிலளிக்கவும்' என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இந்த 'நோ' என்ற பதிலுக்குப் பின்னால் ஒரு மறைக்கப்பட்ட ஆட்டோ எக்ஸிகியூஷன் ஃபைல் இருக்கும். நீங்கள் 'நோ' என்று பதிலளித்தவுடன், அந்த ஃபைல் தானாகவே ஆக்டிவேட் ஆகி, உங்கள் மொபைல் போனின் முழு கட்டுப்பாட்டையும் ஹேக்கர்களுக்குக் கொடுத்துவிடும்.

இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ஒருவர் எந்த லிங்க்கையும் கிளிக் செய்யாமலோ, எந்த ஓடிபி எண்ணையும் பகிராமலோ, வெறும் 'நோ' என்று பதிலளித்ததன் காரணமாக மட்டும் ரூ.1.70 லட்சத்தை இழந்துள்ளார். இது இந்த மோசடியின் தீவிரத்தை உணர்த்துகிறது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். தெரியாத எண்ணில் இருந்து உங்கள் வங்கிக் கணக்கில் பணம் எடுக்கப்பட்டதாக வாட்ஸ்அப் மூலம் செய்தி வந்தால், அதற்கு ஒருபோதும் பதிலளிக்கக் கூடாது. உடனடியாக அந்த செய்தியை அழித்துவிட வேண்டும்.

வந்த செய்தி உண்மையா அல்லது போலியா என்பதை உறுதிப்படுத்த, உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ செயலி (Official App) மூலமாக மட்டுமே உங்கள் கணக்கு அறிக்கை மற்றும் இருப்பைச் சரிபார்க்க வேண்டும். மேலும், வங்கிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் சரிபார்க்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை எண்களை மட்டுமே நம்ப வேண்டும். வங்கிகள் ஒருபோதும் வாட்ஸ்அப் வழியாக இதுபோன்று 'ஆம்', 'இல்லை' என்று பதிலளிக்குமாறு செய்திகளை அனுப்பாது என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, இது போன்ற மோசடி கும்பலிடம் ஏமாந்துவிடாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version