இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். 2019 உலகக் கோப்பையின் போது '3டி வீரர்' என விமர்சிக்கப்பட்ட விஜய் சங்கர், தனது 25 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்ட விஜய் சங்கர், 'கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை. 10 வயதில் விளையாடத் தொடங்கி, 25 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் உயரிய நிலையை எட்டியதை ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தியாவுக்காக விளையாடிய தருணங்கள் என் வாழ்வின் பெருமைமிக்க தருணங்கள்' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சங்கர் இந்திய அணிக்காக 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2018-ல் இலங்கைக்கு எதிராக அறிமுகமான இவர், 2019 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். சர்வதேச அளவில் மொத்தம் 324 ரன்களும் 9 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். நாக்பூரில் நடைபெற்ற இந்தியாவின் 500-வது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரை வீசி வெற்றியைத் தேடித்தந்தது இவரது வாழ்நாள் சாதனைகளில் ஒன்றாகும்.
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்காக அவர் விளையாடியுள்ளார். ஐபிஎல் அரங்கில் மொத்தம் 1233 ரன்களும் 9 விக்கெட்டுகளும் எடுத்துள்ள விஜய் சங்கர், கடைசியாக 2025-ல் சிஎஸ்கே அணிக்காகக் களம் கண்டார். உள்ளூர் போட்டிகளில் தமிழ்நாடு மற்றும் திரிபுரா அணிகளுக்காகவும் இவர் விளையாடியுள்ளார்.
தனது கிரிக்கெட் பயணத்தில் சந்தித்த கேலிகள் மற்றும் விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், 'நான் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வெறுப்பையும் எதிர்மறையான கருத்துகளையும் சந்தித்திருக்கிறேன். ஆனால் அவற்றைப் பொருட்படுத்தாமல் முன்னேறுவதையே நான் தேர்வு செய்தேன். கஷ்ட காலங்களில் என்னுடன் நின்ற குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்குத் தலைவணங்குகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். 'உங்கள் 3டி கிரிக்கெட்டர், விஜய் சங்கர்' என்று தனது பதிவை முடித்துள்ள அவருக்கு, சக வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அடுத்தகட்டமாகப் புதிய வாய்ப்புகளைத் தேடிப் பயணிக்கப் போவதாகவும் அவர் தனது பதிவில் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

