முதலமைச்சருக்கு கொஞ்சமாவது சூடு, சொரணை இருக்கும் என நினைத்தேன், ஆனால் அவர் ஒருபோதும் கோப்புகளைத் திறக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை பாரிமுனையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், 'திராவிட மாடல் அரசின் சாதனைகள் சினிமா மாயை மற்றும் கவர்ச்சியால் இளம் தலைமுறையிடம் சென்றடையவில்லை. இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு விபத்து போல அமைந்துள்ளது. மக்கள் அவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. திமுக-வின் தயவினால் தான் இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அடுத்த தேர்தலில் அதனை மாற்றிக் காட்ட வேண்டும்' என்று குறிப்பிட்டார்.
மேலும், 'மூன்று கோப்புகள் வந்துள்ளன, திறக்க வைத்துவிடாதீர்கள்' என முதலமைச்சர் மிரட்டுவதாகக் குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், 'தைரியம் இருந்தால் அதைத் திறங்கள். இந்த முதலமைச்சருக்கு கொஞ்சமாவது சூடு, சொரணை இருக்கும் என நினைத்தேன், ஆனால் ஒரு நாளும் கோப்பைத் திறக்க மாட்டேங்கிறார். இன்று இவர் இந்தக் கோப்பைப் பற்றித் திறப்பார் என்று நினைத்தேன், ஆனால் வாயைத் திறக்கவில்லை' என்று சாடினார்.
திமுக அரசு கஜானாவைக் காலி செய்துவிட்டதாகக் கூறிய முதலமைச்சருக்கு, கார் வாங்க பணம் எப்படி வந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த ஆட்சியின் அவலங்களுக்கு எதிராக ஆதரவு அளித்த இடதுசாரி தோழர்களே குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
ஆட்சிக்கு வரும் முன் ஊழலை ஒழிப்போம், மாற்றம் எனக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று மிகப்பெரிய ஏமாற்றத்தை மட்டுமே மக்களுக்குத் தந்துள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஆளுங்கட்சியினரே பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.
இந்த ஆட்சி அமைந்த 105 நாட்களில் விவசாயிகள் தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் பிரச்சனையைப் பேசியதற்காகத் தன்னையும் கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
தேர்தலில் நமக்கு எதிரிகள் யார் என்று தெரியாமல் சண்டை போட்டுக் கொண்டிருந்தோம். இப்போது எதிரிகள் யார் என்று தெரிந்துவிட்டது. மீண்டும் அந்தத் தவறை நாம் செய்ய மாட்டோம். மக்களும் அந்தத் தவறை செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் என்றும் மக்களோடு மக்களாக இருக்கக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அதைத்தான் முத்தமிழறிஞர் கலைஞரும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள்” என்றார்.
சினிமா மாயை மற்றும் கவர்ச்சியால் திராவிட மாடல் அரசின் சாதனைகள் இளம் தலைமுறையிடம் சென்றடையவில்லை என்றும், தேர்தல் முடிவுகள் ஒரு விபத்து போல அமைந்ததாகவும், மக்கள் அவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். திமுக-வின் தயவினால் தான் இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்றும், இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அடுத்த தேர்தலில் அதனை மாற்றிக் காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

