மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்திருந்தனர். கடுமையான வெயில் காரணமாகவும், சுமார் மூன்று மணி நேரமாக பேரிகார்டுகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாலும், தண்ணீர் இன்றி தவித்த தொண்டர்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர்.
முதலமைச்சர் விஜய் மருத்துவமனைக்குள் சென்றதும், 15க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். பெண்கள், சிறுவர்கள், வயதானவர்கள் என பலரும் மயக்கமடைந்தனர். அவர்களை காவல்துறையினர் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், முதலமைச்சரின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சாலையின் நடுவே நிறுத்தப்பட்டிருந்ததால், அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்ற பிறகு, பேரிகார்டுகளுக்குள் இருந்தவர்கள் அதிலிருந்து ஏறி குதித்து தப்பித்து ஓடினர். பின்னர், மயக்கமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
